கோலா சிலாங்கூர், ஏப்ரல் 16 – சிலாங்கூர், கோலா சிலாங்கூர், பாசிர் பெனாம்பாங்கிலுள்ள, தங்கும் விடுதி ஒன்றின் கார் நிறுத்துமிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடியை உடைத்து, மடிக்கணினியைத் திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய ஆடவனை கைது செய்ய, 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தை மட்டுமே போலீசார் எடுத்துக் கொண்டனர்.
அந்த 20 வயதான சந்தேக நபர், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மணி மூன்று வாக்கில், கம்போங் பெர்மாத்தாங் தெங்கா அருகே கைதுச் செய்யப்பட்டதை, கோலா சிலாங்கூர் போலீஸ் துணைத் தலைவர் டெபுடி சுப்ரிடெண்டன் முஹமட் அம்பியா நோர்டின் உறுதிப்படுத்தினார்.
முன்னதாக, கடந்த சனிக்கிழமை இரவு மணி 8.30 வாக்கில், இன்னும் கைதுச் செய்யப்படாமல் இருக்கும் தனது நண்பன் ஒருவனுடன் இணைந்து, கார் கண்ணாடியை உடைத்து, அவன் மடிக்கணினியை திருடியுள்ளான்.
காரின் உரிமையாளர் செய்த புகாரைத் தொடர்ந்து, அவ்வாடவனை கைதுச் செய்த போலீசார், அவன் திருடிச் சென்ற பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
அதே சமயம், இன்னும் தலைமறைவாக உள்ள அவனது நண்பனை தேடும் பணிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.