கோலாலம்பூர், ஏப்ரல் 17 – ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, தனது மூன்று வயது மாற்றான் மகனைக் கொலை செய்த வழக்கில், “பாய் டைகர்” என அழைக்கப்படும் நபருக்கு எதிராக 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து இன்று மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதோடு, 37 வயதான கைருல் இசானி கைருட்டின் எனும் அவ்வாடவனுக்கு 12 பிரம்படிகளும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
முன்னதாக, தமக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து கைருல் செய்திருந்த மேல்முறையீட்டை ஏற்க முடியாது என நீதிபதி வசீர் ஆலம் மைடின் மீரா தெரிவித்தார்.
2018-ஆம் ஆண்டு, நவம்பர் 18-ஆம் தேதி, அம்பாங், தாமான் புக்கிட் இண்டாவிலுள்ள, வீடொன்றில் கைரில் அக்மல் அப்துல் ஹக்கீமைக் கொலை செய்ததற்காக, 2022-ஆம் ஆண்டு, ஆகஸ்ட்டு 22-ஆம் தேதி, கைருல் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டான்.
அந்த கொலையை நேரில் கண்ட சிறுவனின் தாயார் சாட்சியம் அளித்த வேளை ; துன்புறுத்தலுக்கு இலக்காகி அச்சிறுவன் இறந்ததை சவப்பரிசோதனை அறிக்கையும் உறுதிப்படுத்தியுள்ளது.
எனினும், கழிவறையில் விழுந்ததால், சிறுவன் காயமடைந்ததாக கூறி அவனை கைருல் மருத்துவமனையில் சேர்த்துள்ளான். சிகிச்சை பலனின்றி, 2018-ஆம் ஆண்டு, டிசம்பர் 22-ஆம் தேதி, அச்சிறுவன் அம்பாங் மருத்துவமனையில் உயிரிழந்ததை அடுத்து கைருல் கைதுச் செய்யப்பாட்டன் என்பது குறிப்பிடத்தக்கது.