கோலாலம்பூர், ஏப் 21 – ஒழுங்கு நடவடிக்கை காரணமாக பூச்சோங் தொகுதி காங்கிரஸ் தலைவர் Awtar Singh நேற்று ம.இ.காவிலிருந்து நீக்கப்படும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ம,இ.காவின் தேசிய தலைவர் SA விக்னேஸ்வரனை சமூக வலைத்தளத்தில் குறைகூறி காணொளி ஒன்றை பதிவிட்டது தொடர்பாக பல்வேறு புகார்கள் கிடைத்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக Awtar Singh கிற்கு ம.இ.கா தலைமையகம் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் தோற்றத்திற்கு Awtar Sing பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதோடு அவப் பெயரையும் ஏற்படுத்தியுள்ளார். கட்சியை இழிவுபடுத்தி, கடுமையான குற்றச்சாட்டை சுமத்திய வைரலான வீடியோக்கள் தொடர்பாக நான் பல புகார்களை பெற்றுள்ளேன் . உங்கள் நடவடிக்கைகள் ம.இ.கா சட்டவிதி 14.1.4 ஐ மீறியிருப்பதையும் நான் காண்கிறேன். மஇகா துணைத் தலைவருடன் விவாதித்த பிறகு, மஇகா சட்டவிதியின் 61.2 வது பிரிவின் கீழ் மேலே கூறப்பட்ட உங்கள் செயல்கள் காங்கிரஸின் நலனுக்கு பாதிப்பு விளைவிப்பதால் கட்சியிலிருந்து உங்களை உடனடியாக வெளியேற்றுகிறேன் என Avtar Singh கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கிறார். மேலும் இந்தக் கடிதத்தைப் பெற்றுக் கொண்ட 14 நாட்களுக்குள் கட்சியின் மத்திய செலயவையில் இந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உங்களுக்கு உரிமை உண்டு என்பதையும் கவனத்தில் கொள்ளும்படியும் அந்த கடிதத்தில் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.