ஷா ஆலாம், ஏப்ரல் 22 – சிலாங்கூர், குவாலா குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலில் ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளரை ஆதரித்து ம.இ.கா கண்டிப்பாக பிரச்சாரத்தில் இறங்கும்.
அக்கட்சியின் தலைவர் டான் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தம்மிடம் அந்த உத்தரவாதத்தை வழங்கியிருப்பதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
எனவே, தேசிய முன்னணி அல்லாத வேட்பாளர் களமிறக்கப்பட்டால் ம.இ.கா அவ்விடத் தேர்தலில் ஒத்துழைக்காது என வெளியான தகவல்களில் உண்மையில்லை என, பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான அன்வார் கூறியுள்ளார்.
DAP-யைச் சேர்ந்த குவாலா குபு பாரு சட்டமன்ற உறுப்பினர் லீ கீ ஹியோங் புற்றுநோய்க் காரணமாக மார்ச் 21-ஆம் தேதி காலமானதை அடுத்து அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
தேசிய முன்னணி அத்தொகுதியைக் கேட்காது; மாறாக DAP-யே அத்தொகுதியைத் தக்க வைத்துக் கொள்ள போட்டியிட வழி விடும் என பாரிசான் தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி கூறியிருந்தார்.
இந்நிலையில், BN போட்டியிடாததால் ம.இ.கா பிரச்சாரத்தில் இறங்காது என அதன் தலைமைத்துவம் கூறியதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
பாரிசானின் மற்றொரு முக்கிய உறுப்புக் கட்சியான MCA-வும் அதே நிலைப்பாட்டை எடுத்திருப்பதாக அறிவித்ததை அடுத்து, ஒற்றுமை அரசாங்கக் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது.
எனினும் தற்போது பிரதமரின் அறிவிப்பு, ம.இ.கா தொடர்பான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது என அரசியல் பார்வையாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.