பெய்ஜிங், ஏப்ரல் 24 – மாணவர்களுக்கு இரவு 9.30 மணிக்கு மேல் வீட்டுப் பாடங்களைக் கொடுக்கக் கூடாது என சீனாவில் உள்ள ஆரம்பப் பள்ளியொன்று கட்டளையிட்டிருப்பது அந்நாட்டு நெட்டிசன்கள் மத்தியில் சூடான விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
அப்படி வீட்டுப் பாடங்களை முடிக்காத மாணவர்கள் மறுநாள் பள்ளிக்குச் செல்லும் போது தண்டிக்கப்பட மாட்டார்கள் என்றும் அப்பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இரவில் ஓய்வெடுக்க வேண்டிய நேரத்தில் மாணவர்கள் புத்தகமும் கையுமாக இருக்கக் கூடாது என்பதை உறுதிச் செய்வதற்காக, GuangXi மாநிலத்தில் உள்ள அப்பள்ளி அந்நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
மாணவர்களுக்கு அதுவும் ஆரம்பப் பள்ளியிலே கல்வியில் அழுத்தம் கொடுப்பது ஆரோக்கியமானதல்ல என அப்பள்ளி நிர்வாகம் விளக்கியது.
பள்ளி நேரத்துக்கு வெளியே மாணவர்கள் முதன்மைப் பாடங்களை மேற்கொண்டு கற்பதையும், வீட்டுப் பாடங்களைச் செய்வதையும் குறைத்து, அவர்களுக்கு அழுத்தம் கொடுக்காமல் பார்த்துக் கொள்ளும் வகையில் சீனாவில் 2021-ஆம் சட்டமே நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சதா படிப்பில் மட்டுமே மாணவர்கள் மூழ்கிக் கிடக்காமல், போதிய ஓய்வோடு உடற்பயிற்சியும் அவர்களுக்குக் கிடைப்பதை பள்ளி நிர்வாகங்களும் பெற்றோர்களும் உறுதிச் செய்ய அச்சட்டம் வலியுறுத்துகிறது.
சீனாவில் பிள்ளைகள் கல்விக்கேள்விகளில் சிறந்து விளங்குவதற்கு அதிக முக்கியத்துவம் தரப்படும் நிலையில், அப்பள்ளியின் உத்தரவு நெட்டிசன்கள் குறிப்பாக பெற்றோர்கள் மத்தியில் கலவையானக் கருத்துகளைப் பெற்று வருகிறது.
பாதிப் பேர் அதனைப் பெரிதும் வரவேற்ற நிலையில், எஞ்சியப் பெற்றோர்கள், மேலும் போட்டித் தன்மை மிக்க இடைநிலைப் பள்ளிக் கல்விக்குப் பிள்ளைகளைத் தயார்படுத்தும் முயற்சி சுணக்கமடையலாம் என கவலைத் தெரிவித்தனர்.