சிங்கப்பூர், ஏப்ரல் 24 – சிங்கப்பூரில் நடக்கவுள்ள தலைமைத்துவ மாற்றம் குறித்து ஏளன தோரணையில் கட்டுரை வெளியிட்ட பிரிட்டனின் நிதி வார இதழான The Economist-டை, சிங்கையின் சட்ட மற்றும் உள்துறை அமைச்சர் கே.ஷண்முகம் கடுமையாகச் சாடியிருக்கின்றார்.
“அவர்களால் எங்களை சீண்டாமல் இருக்க முடியாது; எல்லா விஷயங்களிலும் மூக்கை நுழைத்து கருத்துச் சொல்லியே அவர்களுக்கு பழகி விட்டது; அந்தளவுக்கு அது அவர்களுக்குள் ஊறிப் போயிருக்கின்றது” என தனது facebook-கில் ஷண்முகம் காட்டமாக சொன்னார்.
கடந்த வியாழன்று வெளியான The Economist-டின் தலையங்கத்தில், சிங்கப்பூரின் புதியப் பிரதமராகவிருக்கும் Lawrence Wong பற்றி அந்நாட்டு மக்களுக்கே பாதிப் பேருக்குத் தெரியாது என கிண்டலடித்திருந்தது.
அதோடு, பிரதமர் பதவிக்கு பரிசீலிக்கப்பட்டவர்களில் அவர் முதல் தேர்வும் அல்ல; அவருக்காக வேறொருவர் பலிகடா ஆக்கப்பட்டு விட்டார் என்றும் குற்றம் சாட்டியிருந்தது.
அதை விட ஒரு படி மேல் சென்று, மறைந்த சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ, தனது 31 ஆண்டு பதவிக் காலத்தில், இரும்புக் கரம் கொண்டு அக்குடியரசை ஆட்சிப் புரிந்தார் என்றும் கடும் குற்றச்சாட்டை முன் வைத்தது.
ஒவ்வொருத் தேர்தலிலும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள, ஆளும் PAP கட்சி தந்திரங்களைக் கையாண்டு வருவதாகவும் அது குற்றம் சாட்டியது.
The Economist-டின் அந்த ‘சீண்டல்’, காலணித்துவ நாடு இன்று தங்களை முந்தி நிற்பதை ஏற்றுக் கொள்ள முடியாமல் வயிறு எரிவதையே காட்டுவதாக ஷண்முகம் விளாசினார்.
பிரதமர் லீ சியென் லூங் வரும் மே 15-ஆம் தேதி பதவி விலகி, நடப்புத் துணைப் பிரதமரான Lawrence Wong, சிங்கையின் நான்காவது பிரதமராக அன்றையே தினமே பதவியேற்கிறார்.