பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 26 – கோலா குபு பாருவில், நாளை மாலை சிலாங்கூர் மாநில அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, ஹரி ராயா பொது உபசரிப்பு, 1954-ஆம் ஆண்டு தேர்தல் குற்றச் சட்டத்துக்கு எதிரானதாக வகைப்படுத்தப்படலாம் என பெர்சே எச்சரித்துள்ளது.
நாளை, கோலா குபு பாரு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தினத்தன்று நடைபெறும் அந்த நிகழ்ச்சியின் போது, விருந்துபசரிப்புடன், ஹரி ராயா அன்பளிப்பு பணம் வழங்குதல் போன்ற நடவடிக்கைகளும் இடம்பெறும்.
தேர்தல் காலத்தில், 1954-ஆம் ஆண்டு தேர்தல் குற்றச் சட்டத்தின் எட்டாவது பிரிவின் கீழ், உணவு கொடுப்பது அல்லது பரிமாறுவது ; அல்லது பத்தாவது பிரிவின் கீழ், “டுவிட் ராயா” அன்பளிப்பு பணம் கொடுப்பது ஆகியவை குற்றமாகும் என அந்த தேர்தல் கண்காணிப்பு அமைப்பு ஓர் அறிக்கையின் வாயிலாக கூறியுள்ளது.
சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கலந்து கொள்ள அந்த பொது உபசரிப்பிற்கு, சுமார் 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வருகை புரிவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கோலா குபு பாரு சட்டமன்ற உறுப்பினரான DAP-யின் லீ கீ ஹியோங், கடந்த மாதம் புற்றுநோயால் காலமானதை அடுத்து, அங்கு மே 11-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.