தெஹ்ரான், மே 7 – ஈரான் Yasuj மாநிலத்தில், ஏராளமான மீன்கள் ‘வானத்திலிருந்து விழுந்த‘ சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வானத்தில் இருந்து விழுந்த மீன்கள் தாக்கி காயமடையாமல் இருக்க பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு ஓடியதாக, கூறப்படுகிறது.
நேற்று அடை மழை பெய்து கொண்டிருந்த போது, அந்த விநோதமான சம்பவம் நிகழ்ந்தது.
மழை பெய்த போது, திடீரென வானத்திலிருந்து ஏராளமான மீன்கள் விழும் காட்சிகள் அடங்கிய காணொளி ஒன்றும் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
குறிப்பாக, மழை பெய்துக் கொண்டிருக்கும் போது, கார் ஒன்றிலிருந்து இறங்கும் நபர் ஒருவரை சுற்றி மீன்கள் விழும் காட்சி அந்த காணொளியில் இடம் பெற்றுள்ளது.
நிலத்தில் விழுந்து அடிபட்டாலும் உயிருடன் துள்ளும் மீனை அவ்வாடவர் கையில் எடுத்து பார்க்கும் காட்சியும் அதில் இடம் பெற்றுள்ளது.
எனினும், சுழற் காற்றால் அந்த அதிசய நிகழ்வு ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. சுழல் காற்றால் மேலே கொண்டு செல்லப்பட்ட சிறிய கடல் வாழ் உயிரினங்கள் மீண்டும் நிலத்தில் விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
அந்த விநோதமான நிகழ்வு பதிவுச் செய்யப்பட்ட Yasuj மாநிலத்தில், சூறாவளி ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், சமூக ஊடக உள்ளடக்கத்திற்காக, வீடியோவை பதிவுச் செய்ய, யாரோ ஒருவர் கடலில் இருந்து புதிதாக பிடித்த மீனை காற்றில் வீசி இருக்கலாம் என மற்றொரு ஆருடமும் வெளியிடப்பட்டுள்ளது.