ஈப்போ, மே 20 – பேராக், ஈப்போ, லாபாங்கான் பெர்டானாவிலுள்ள, பனோராமா அடுக்குமாடி குடியிருப்பில், குடிநுழைவுத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனையிலிருந்து தப்ப, கட்டில் அடியில் மறைந்திருந்த இந்தோனேசிய பெண் ஒருவர் கைதுச் செய்யப்பட்டார்.
நேற்றிரவு மணி 11.50 முதல் பின்னிரவு மணி 2.30 வரை அந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சம்பந்தபட்ட அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் 53 வீடுகளில் வசிக்கும் 68 வெளிநாட்டவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக, பேராக் மாநில குடிநுழைவுத் துறை இயக்குனர் மியோர் ஹெஸ்புல்லா மியோர் அப்துல் மாலிக் தெரிவித்தார்.
அதில், பல்வேறு குடிநுழைவு குற்றங்கள் தொடர்பில், அப்பெண் உட்பட 23 பேர் கைதுச் செய்யப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் இரண்டு வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் ஆவர்.
அதில் இருவர், அனுமதிக்கப்பட்டதை காட்டிலும் நாட்டில் நீண்ட காலம் தங்கியுள்ள வேளை ; இதர 20 பேரிடம் முறையான ஆவணம் எதுவும் இல்லை என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அதனால், வெளிநாட்டவர்களுக்கு வீட்டை வாடகைக்கு விடுவதற்கு முன், அவர்களின் ஆவணங்களை சரிபார்க்குமாறு, வீட்டு உரிமையாளர்களை ஹெஸபுல்லா கேட்டுக் கொண்டுள்ளார்.