சென்னை, மே-23 – தான் இசையமைத்த குணா படப்பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் கூறி, ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ மலையாளப் பட தயாரிப்பு நிறுவனத்துக்கு இசைஞானி இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
கடந்த பிப்ரவரியில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் படம் கேரளா மட்டுமின்றி தமிழகத்திலும் நல்ல வசூலைக் குவித்திருந்தது.
அப்படத்தில், இளையராஜா இசையில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான குணா படத்தின் ‘கண்மணி அன்போடு காதலன்’ என்ற பாடலைப் பயன்படுத்தியிருந்தனர்.
படத்தோடு அப்பாடலும் பட்டித்தொட்டி எங்கும் வைரலாக, தற்போது காப்புரிமை மீறல் தொடர்பில் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அனுமதி இல்லாமல் பயன்படுத்தப்பட்டுள்ள அப்பாடலை படத்தில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும்; இல்லையேல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்னுடையப் பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் கூறி அண்மையக் காலமாகவே இசைஞானி பலருக்கும் நோட்டீஸ் அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
அண்மையில் கூட, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஸ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் தயாராகி வரும் ‘கூலி’ படத்தின் டீசரில் வந்த பாடலுக்காக Sun Pictures நிறுவனத்துக்கு அவர் நோட்டீஸ் அனுப்பினார்.
80-களில் வெளியான ரஜினியின் ‘தங்க மகன்’ படத்தில் இளையராஜா இசையமைத்திருந்த ‘வா வா பக்கம் வா’ பாடலின் இசையையும் கூலி படத்தில் அனிருத் பயன்படுத்தி இருந்தார்.