மோஸ்கோ, மே 28 – ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டுகளுக்கு பிறகு, தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் இருந்து தலிபான்களை நீக்க ரஷ்யா முடிவு செய்திருப்பதாக, உள்நாட்டு RIA செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
சர்வதேச தடைகளை தாண்டி, பல ஆண்டுகளாகவே தாலிபான்களுடன் மோஸ்கோ உறவை வளர்த்து வருகிறது.
தாலிபான்களுடன் தொடர்ந்து பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதோடு, ஆப்கானிஸ்தானுடன் வர்த்தக உறவையும் அது கொண்டுள்ளது.
பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து தாலிபான்களை நீக்கும் முடிவை அண்மையில் கஜகஸ்தான் எடுத்துள்ளது, அந்த முடிவை ரஷ்யாவும் எடுக்கும் என, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை மேற்கோள்காட்டி RIA செய்தி வெளியிட்டுள்ளது.
2023-ஆம் ஆண்டு, தடை செய்யப்பட்ட அமைப்புகள் பட்டியலில் இருந்து தாலிபான்களை நீக்கியது கஜகஸ்தான்.
அதனை ரஷ்யாவும் பின்பற்றினால், அவ்விரு நாடுகளுக்கு இடையிலான அரச தந்திர உறவு மேலும் அதிகரிக்ககூடும். எனினும், அதனால், தலிபான் அரசாங்கத்திற்கு உலக நாடுகளின் அங்கீகாரம் கிடைக்க கூடுமா என்பது தெரியவில்லை.
2021-ஆம் ஆண்டு, அமெரிக்க ஆதரவு அரசாங்கத்திடமிருந்து அதிகாரத்தை கைப்பற்றிய தாலிபான்கள், பெண்கள் பொது வாழ்க்கையில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கும் தீவிர கொள்கைகளை அமல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.