கோலாலம்பூர், மே 30 – அண்மையில் கோலாகுபு பாருவில் நடைபெற்ற இடைத்தேர்தலின்போது மாட்சிமை தங்கிய பேரரசரின் புகைப்படங்களுடன் வாகனத்தில் கொடிகளையும் அலங்கரித்திருந்ததாக 66 வயதுடைய ராமசாமி மீது இன்று மீண்டும் கோலா குபு பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டது.
வெவ்வேறு வாக்காளர்களைக் கொண்ட பல்வேறு தரப்புகளுடன் மோதலை ஏற்படுத்துவதை தூண்டக்கூடிய வகையில் 1954 ஆம் ஆண்டு தேர்தல் சட்டத்தின் 4 ஆவது விதி உட்பிரிவு (1) இன் கீழ் கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டை ராமசாமி மறுத்தார்.
மே மாதம் 4ஆம்தேதி கோலா குபு பாருவிலுள்ள Taman BuKit Bungaவில் அவர் இக்குற்றத்தை புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டார். குற்றச்சாட்டின் விளைவு மற்றும் அதன் பாதிப்பை புரிந்துகொள்ள தவறியதால் இதற்கு முன் ராமசாமிக்கு எதிரான குற்றமும் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையையும் நீதித்துறை ஆணையாளர் Wendi Ooi தள்ளுபடி செய்திருந்தார். அதோடு அவருக்கு எதிரான விசாரணையை மாஜிஸ்திரேட் முன்னிலையில் மீண்டும் நடத்தும்படி Wendy Ooi உத்தரவிட்டிருந்தார்.
பேரா , Tanjung Rambutanனைச் சேர்ந்த ராமசாமி நான்கு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றபோது இந்த குற்றத்தை புரிந்ததாக கூறப்பட்டது. தனக்கு விதிக்கப்பட்ட 4,000 ரிங்கிட் ஜாமின் தொகையை ராமசாமி இன்று செலுத்தியதாக அவரது வழக்கறிஞர் ராஜேஸ் நாகராஜன் தெரிவித்தார்.
மலாய் மொழி அவ்வளவாக தெரியாத காரணத்தினால் தேசிய மொழியில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது அவரால் அதனை முழுமையாக புரிந்துகொள்ள முடியவில்லை. இன்று குற்றச்சாட்டு தமிழ் மொழியில் வாசிக்கப்பட்போது அதனை ராமசாமி புரிந்துகொண்டதைத் தொடர்ந்து அவர் மீதான குற்றச்சாட்டு ஜூன் 19 ஆம் தேதியில் மீண்டும் மறுவாசிப்புக்கு செவிமடுக்கப்படும்.