மேற்கு சுமத்ரா, மே-31 – இந்தோனீசியாவின் மேற்கு சுமத்ராவில் உள்ள மராப்பி எரிமலை மீண்டும் வெடித்துள்ளது.
இதனால் ஆகாயத்தில் இரண்டாயிரம் மீட்டர் உயரத்திற்கு அது சாம்பலைக் கக்கியது.
எரிமலை வெடிப்புச் சத்தத்தை வெகு தொலைவில் உள்ள பகுதிகள் வரை கேட்க முடிந்தது.
தற்போது மூன்றாம் கட்ட எச்சரிக்கை அளவில் வைக்கப்பட்டுள்ள மராப்பி எரிமலைக் குழம்பின் செயல்பாடுகள், 2 நிமிடங்கள் 2 வினாடி வரையில் நீடிக்கின்றன.
எரிமலைக் குழம்புகள் மழைநீரில் அடித்துக் கொண்டு வரலாம் என்பதுடன், எரிமலை சாம்பலும் காற்றில் பல மைல் தூரங்களுக்கு பறந்து வந்து விழலாம்.
இதையடுத்து எரிமலைக்கு அருகில் 4.5 கிலோ மீட்டர் சுற்று வட்டத்தில் வசிக்கும் மக்களுக்கு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சாம்பலை நுகர்ந்தால் சுவாச நோய்கள் ஏற்படலாம் என்பதால் சுவாசக் கவசங்களை அணியுமாறும் அவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
2,891 மீட்டர் உயரம் கொண்ட மராப்பி எரிமலை, கடந்தாண்டு டிசம்பரில் வெடித்துச் சிதறியதில் 23 பேர் பலியாயினர்.
50-கும் மேற்பட்ட மலையேறிகள் அதிர்ஷ்டவசமாகக் காப்பாற்றப்பட்டனர்.