புத்ராஜெயா, மே 31 – நூறு ரிங்கிட் புத்தப் பற்றுசீட்டு தவறாகப் பயன்படுத்தப்படும் சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க, உயர்கல்விக்கூடங்களை சேர்ந்த சுமார் 12 லட்சம் மாணவர்கள் அதனை முறையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு, உயர்கல்வி அமைச்சர் ஜாம்ரி அப்துல் காடிர் நினைவுறுத்தியுள்ளார்.
பழைய சம்பவங்கள் மீண்டும் நிகழாது என தாம் நம்புவதாக ஜாம்ரி கூறியுள்ளார்.
இவ்வாண்டுக்கான கோலாலம்பூர் அனைத்துலக புத்தக கண்காட்சியை முன்னிட்டு, இன்று மாலை தொடங்கி, மாணவர்களுக்கான 100 ரிங்கிட் புத்தகப் பற்றுசீட்டு கட்டங் கட்டமாக விநியோகிக்கப்படும்.
நான்காம் ஆண்டு தொடங்கி உயர்கல்விக்கூடம் வரையிலான மாணவர்களுக்கு, மீண்டும் நூறு ரிங்கிட் புத்தகப் பற்றுச்சீட்டு வழங்கப்படும் என நேற்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்திருந்தார்.
மாணவர்கள் தரமான புத்தகங்களை வாங்க ஏதுவாக பரிந்துரைக்கப்பட்ட புத்தகங்களின் பட்டியலுடன் அந்த 100 ரிங்கிட் பற்றுசீட்டு வழங்கப்படுமெனவும் அவர் கூறியிருந்தார்.
மாணவர்களுக்கான புத்தகப் பற்றுசீட்டு, 2016-ஆம் ஆண்டு, அப்போதைய பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் தலைமையிலான தேசிய முன்னணி அரசாங்கத்தால், முதல் முறையாக அறிமுகம் கண்டது.
எனினும், படிவம் ஆறு மற்றும் உயர்கல்விக்கூட மாணவர்களுக்கு மட்டுமே அது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.