லண்டன், ஜூன்-5 – அரசியார் இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்குப் பிறகு அரியணை ஏறி கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆகும் நிலையில்
மன்னர் மூன்றாம் சார்லஸ் உருவம் பொறிக்கப்பட்ட புதிய பணநோட்டுகள் பிரிட்டனில் புழக்கத்திற்கு வந்துள்ளன.
5 பவுண்ட், 10 பவுண்ட், 20 பவுண்ட், 50 பவுண்ட் என தொடக் கட்டமாக அச்சிடப்பட்டுள்ள அந்த போலிமர் பண நோட்டுகளில் மன்னர் சார்லஸின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
நோட்டுகளின் முன் பக்கத்தில் சார்லஸின் உருவப்படமும், பாதுகாப்பு சாளரத்தில் அவரின் கேமியோவும் இடம் பெற்றுள்ளன.
மற்ற படி, ஏற்கனவே உள்ள பண நோட்டுகளில் இருந்து இப்புதிய நோட்டுகள் மாறாமல் இருக்கின்றன.
தமது உருவம் பொறித்த பண நோட்டுகளின் வடிவமைப்பை, 2022-ஆம் ஆண்டு அரசியார் எலிசபெத் மறைந்த சில மாதங்களில் மன்னர் சார்லஸ் அங்கீகரித்து இறுதிச் செய்தார்.
என்றாலும் எலிசபெத் அரசியாரின் உருவம் பொறிக்கப்பட்ட பண நோட்டுகள் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும்.
புதிய பண நோட்டுகள் புழக்கத்திற்கு வருவது அதிரடி மாற்றமாக இல்லாமல், கட்டங்கட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
அரண்மனையின் வழிகாட்டுதலில் ஆன இந்த அணுகுமுறையானது, சுற்றுச்சூழல் மற்றும் நிதி தாக்கத்தை குறைக்கும் நோக்கத்தைக் கொண்டதாகும் என இங்கிலாந்து மத்திய வங்கி கூறியது.
இங்கிலாந்தில் 1,000 ஆண்டுகளுக்கும் மேலாக அரசர்கள் மற்றும் அரசியார்களின் உருவப் படங்கள் நாணயங்களில் மட்டும் தான் பொறிக்கப்பட்டு வந்தன.
பிரிட்டின் பண நோட்டுகளில் இடம்பெற்ற முதல் அரசர் அல்லது அரசியார் என்றால் அது இரண்டாம் எலிசபெத் தான் என்பது குறிப்பிடத்தக்கது.