ஜியோர்ஜ்டவுன், ஜூன்-7 – பினாங்கு, ஜெலுத்தோங்கில் மே 31-ஆம் தேதி சாக்குப் பைக்குள் போட்டு கட்டி, ஆற்றில் வீசி பூனையைச் சாகடித்ததாக பலகார வியாபாரி மீது ஜியோர்ஜ்டவுன் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
எனினும் 47 வயது Faizul Azlan Ridzuan, அக்குற்றச்சாட்டை மறுத்தார்.
இதையடுத்து, 6,000 ரிங்கிட் மற்றும் ஒரு நபர் உத்தரவாதத்தில் அவ்வாடவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
வழக்கு ஜூலை 18-ல் மறுசெவிமெடுப்புக்கு வரும் என நீதிமன்றம் அறிவித்தது.
ஜெலுத்தோங்கில் பூனை சாக்குப் பையில் கட்டப்பட்டு ஆற்றில் வீசப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைக்காக, அவ்வாடவர் முன்னதாகக் கைதாகியிருந்தார்.
வைரலான வீடியோவில், பொது மக்களில் சிலர், கட்டப்பட்ட சாக்குப் பையொன்றை ஆற்றில் இருந்து வெளியே எடுப்பதும், அவிழ்த்துப் பார்த்தால் அதனுள் பூனை செத்துப் போய் கிடப்பதும் தெரிந்தது.
அப்படி அங்கு நடப்பது இது முதன் முறையல்ல; ஏற்கனவே சில தடவை அது போன்று பூனைகள் சாக்குப் பைகளில் கட்டப்பட்டு ஆற்றில் வீசப்பட்டதாகக் தங்களுக்குப் புகார் கிடைத்ததாக மலேசிய விலங்குகள் நலச் சங்கமும் கூறியிருந்தது.
மிருகவதைக்காக சந்தேக நபர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும் என அச்சங்கம் அதிகாரத் தரப்பை வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.