கோலாலம்பூர், ஜூன் 7 – ஆறு வயது சிறுவன் சைய்ன் ராயன் ( Zayn Rayan ) கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட அவனது பெற்றோரை மேலும் ஆறு நாட்களுக்கு தடுத்து வைக்கும் உத்தரவை போலீசார் பெற்றனர். அவர்களை தடுத்து வைப்பதற்கு அனுமதிக்கப்பட்ட ஏழு நாள் தடுப்புக் காவல் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து மேலும் ஆறு நாட்களுக்கு இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அவர்களின் வழக்கறிஞரான பாமி அப்துல் மொய்ன் (Fahmi Abdul Moin ) தெரிவித்தார்.
சைய்ன் ராயன் பெற்றோர்களுக்கு எதிரான விசாரணை தொடர்ந்து நீடிப்பதால் காவல் நீட்டிக்கப்பட வேண்டும் என மூத்த விசாரணை அதிகாரி இன்று நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டார். எனினும் அவர்கள் தடுத்து வைக்கப்படாமல் விடுவிக்கப்பட வேண்டும் என அவர்களது வழக்கறிஞர் பாமி அப்துல் மொய்ன் வாதிட்டார். இன்று முதல் அடுத்த ஆறு நாட்களுக்கு அவர்களை தடுத்து வைப்பதற்கு காரணம் இருப்பதாக கருதுவதால் இந்த கோரிக்கைக்கு அனுமதி வழங்குவதாக மாஜிஸ்திரேட் அய்னா முகமட் கமால் ( Ainaa Muhamad Kamal ) தெரிவித்தார்.
இதனிடையே இன்று காலை மணி 9.28 அளவில் சைய்ன் ராயன் பெற்றோர்கள் பெட்டாலிங் ஜெயா நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டபோது நீதிமன்ற வளாகத்தில் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. லோக்காப் சீருடையுடன் சைய்ன் ராயனின் பெற்றோர்கள் நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டதற்கு அவர்களது குடும்ப உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவித்து கூச்சல் போட்டனர், சைய்ன் ராயனுக்கு நீதி வேண்டும் என்ற பாதகைகளையும் அவர்கள் நீதிமன்ற வளாகத்தில் ஏந்தியிருந்தனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி அந்த சிறுவன் Damamsara Damai யில் காணாமல்போனதாக கூறப்பட்டது. மறுநாளன்று அவனது உடல் இறந்த நிலையில் Idaman அடுக்கு மாடி குடியிருப்பு பகுதியிலிருந்து 200 மீட்டர் தொலைவிலுள்ள நீரோடைக்கு அருகே மீட்கப்பட்டது. மருத்துவ பரிசோதனையில் சைய்ன் ராயனின் உடலின் கழுத்து மற்றும் உடலில் காயங்கள் இருந்ததால் அவன் கொலை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.