ஜோர்ஜ் டவுன், ஜூன் 10 – பினாங்கு, ஜோர்ஜ் டவுனில், மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர், கார் ஒன்றை துரத்தி சென்று, ஹெல்மெட்டை கொண்டு தாக்கும் காணொளி வைரலானதை அடுத்து, அதில் சம்பந்தப்பட்ட மோட்டார் சைக்கிளோட்டி கைதுச் செய்யப்பட்டுள்ளார்.
அந்த 30 வயது ஆடவர், நேற்றிரவு, சுங்கை பினாங்கிலுள்ள, அவரது வீட்டில் கைதுச் செய்யப்பட்டதாக, வடகிழக்கு மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் ரஸ்லாம் அப்துல் ஹமிட் (Razlam Ab Hamid) தெரிவித்தார்.
குற்றவியல் சட்டத்தின் 427-வது பிரிவின் கீழ், விசாரணைக்கு உதவும் பொருட்டு அவர் நான்கு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
காரோட்டி, சம்பந்தப்பட்ட ஆடவர் செலுத்திய மோட்டார் சைக்கிளை மோதியதை தொடர்ந்து, அச்சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
சினமடைந்த அந்த மோட்டார் சைக்கிளோட்டி, கார் ஓட்டுனரை சண்டைக்கு அழைத்துள்ளார்.
எனினும், பெரிய சேதம் எதுவும் இல்லாததால், கார் ஓட்டுனர் அவ்விடத்தை விட்டு அகன்று செல்ல முற்பட்ட போது, அவரை ஜாலான் சுங்கை பினாங் வரை துரத்திச் சென்ற மோட்டார் சைக்கிளோட்டி, ஹெல்மெட்டை கொண்டு தாக்கியதாக கூறப்படுகிறது.
அச்சம்பவம் தொடர்பில், சம்பந்தப்பட்ட கார் ஓட்டுனர் போலீஸ் புகார் செய்துள்ள வேளை ; பெண் ஒருவரால் ஒளிப்பதிவுச் செய்யப்பட்ட அச்சம்பவம் தொடர்பான இரண்டு நிமிட காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.