ஜியோர்ஜ்டவுன், ஜூன்-11 – இலக்கு வைக்கப்பட்ட டீசல் மானியம் தீபகற்ப மலேசியாவில் அமுலுக்கு வந்திருப்பதை ஒரு காரணமாக வைத்து விலையேற்றத்தில் ஈடுபட வேண்டாம் என, விரைவுப் பேருந்து நடத்துனர்களும் பள்ளிப் பேருந்து நிறுவனங்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் அந்த நினைவூட்டலை விடுத்துள்ளார்.
SKDS எனப்படும் மானிய விலையிலான டீசல் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் விரைவுப் பேருந்துகளுக்கும் பள்ளிப் பேருந்துகளுக்கும் டீசல் மானியம் தொடர்ந்து வழங்கப்படுகிறது.
ஆகவே, பாதிப்பில்லை என்ற பட்சத்தில் அவர்கள் எதற்காக கட்டணத்தை உயர்த்த வேண்டும் என அமைச்சர் கேள்வி எழுப்பினார்.
இலக்கு வைக்கப்பட்ட டீசல் மானியத்தின் படி திங்கிட்கிழமை முதல் டீசல் விலை 50 விழுக்காட்டுக்கும் மேல் உயர்வுக் கண்டிருப்பதால், விரைவு மற்றும் பள்ளிப் பேருந்துக் கட்டணங்களும் உயர்வு காணும் சாத்தியம் குறித்து கேட்ட போது அந்தோனி லோக் அவ்வாறு கூறினார்.
விரைவுப் பேருந்துகள் APAD எனப்படும் தரைப் பொது போக்குவரத்து நிறுவனத்தின் கீழ் வருவதால், அவை விருப்பம் போல் கட்டணங்களை உயர்த்த முடியாது.
பள்ளிப் பேருந்து கட்டணத்தை அமைச்சு கட்டுப்படுத்தவில்லை என்றாலும், பேருந்து நடத்துனர்களும் பெற்றோர் ஆசிரியர் சங்கங்களும் கலந்து பேசி இணக்கம் காண வேணும் என அந்தோனி லோக் கூறினார்.
இவ்வேளையில் சுற்றுலா பேருந்துகளுக்கு மானியம் இல்லையென்பதால், அவற்றின் கட்டணங்களில் சிறிய உயர்வு இருக்கலாம்.
ஆனால் சுற்றுப் பயணிகள் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையிலேயே விலையேற்றம் இருக்கும் என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.