கோலாலம்பூர், ஜூன் 12 – புதிய பொருளாதார கொள்கையை மலேசியா அகற்றிவிட்டு அதற்கு பதிலாக இனம் மற்றும் சமயத்தை பொருட்படுத்தாமல் ஏழைகளுக்கு உதவும் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் இட்ரிஸ் ஜாலா ( Idris Jala) வலியுறுத்தியுள்ளார். நம்மிடம் நீண்ட காலமாக புதிய பொருளாதார கொள்கை உள்ளது. நாம் அதனை அகற்ற வேண்டும். ஆனால் அதனை வெற்றிடமாக விட்டுவிடக்கூடாது. அனைவரையும் உள்ளடக்கிய புதிய கொள்கையுடன் அதனை மாற்ற வேண்டும் என ஒரு குழு விவாதத்தின் போது இட்ரிஸ் ஜாலா கூறினார்.
மத்திய வருமானம் பெறும் நாடுகளில் பொருளாதார வளர்ச்சி: நடுத்தர வருமான சூழலில் இருந்து நாடுகள் எவ்வாறு தப்பிக்க முடியும்? என்ற தலைப்பில் உலக பொருளக குழுமம் ஏற்பாடு செய்த நிகழ்வில் இட்ரிஸ் ஜாலா உரையாற்றினார்.
மலாய்க்காரர், சீனர், இந்தியர் என இன மற்றும் சமய வேறுபாடு இன்றி இந்நாட்டில் உள்ள ஏழைகளுக்கு உதவுவோம் என்று ஒரு கொள்கையை கொண்டு வாருங்கள் என அவர் அறைகூவல் விடுத்தார். அவர்கள் B40 எனப்படும் குறைந்த வருமானம் பெறும் பிரிவில் இருக்கும் வரை, நாங்கள் சமமான, உறுதியான நடவடிக்கையைப் பயன்படுத்துவோம்.
அதுவே செல்ல வேண்டிய வழி என இட்ரிஸ் ஜாலா சுட்டிக்காட்டினார். நடுத்தர வருமான வலையில் இருந்து வெளிவருவதற்கு, முன்பு இருந்ததைவிட சில மாற்றங்களை செய்ய வேண்டும். இத்தகைய சீர்த்திருத்தங்கள் வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்கள் தாயகம் திரும்புவதை ஊக்குவிக்கும் என்றும் அவர் கூறினார்.
இன ஏற்றத்தாழ்வுகளை குறைக்கவும் வறுமையை துடைத்தொழிக்கவும் புதிய பொருளாதார கொள்கையை 1971 இல் மறைந்த துன் அப்துல் ரசாக் அறிமுகப்படுத்தினார். பூமிபுத்ராக்கள் நாட்டில் மிகவும் ஏழ்மையானவர்கள் என்ற கருத்தின் அடிப்படையில் உயர்கல்வி மற்றும் நிறுவன நிர்வாகத்தில் பூமிபுத்ரா பங்கேற்பை புதிய பொருளாதார கொள்கை ஊக்குவித்தது.