காத்மாண்டு, ஜூன் 27 – வெப்பநிலை அதிகரிப்பால், உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்திலுள்ள, பனிக்கட்டிகள் உருக தொடங்கியுள்ளன.
அதனால், இதுவரை மலையேறும் போது காணாமல் போன மலையேறிகளின் உடல்கள் கண்களுக்கு தென்பட தொடங்கியுள்ளதாக, ராணுவ மேஜர் ஆதித்யா கார்க்கி கூறியுள்ளார்.
12 இராணுவ வீரர்கள் மற்றும் 18 மலையேறிகள் துணையுடன், எவரெஸ்ட் சிகரத்தை துப்புரவு செய்யும் பணியில் கார்க்கி ஈடுபட்டுள்ளார்.
1920-ஆம் ஆண்டு, முதல் முறையாக எவரெஸ்ட் மலையேறும் நடவடிக்கை தொடங்கியதில் இருந்து, இதுவரை 300 மலையேறிகள் உயிரிழந்துள்ளனர்.
துப்புரவு பணி தொடங்கியதில் இருந்து, தமது குழுவினர் இதுவரை ஐந்து சடலங்களை மீட்டுள்ளதாக, கார்க்கி தெரிவித்துள்ளார்.
அதில் ஒரு சடலத்தின், வெறும் எலும்புக்கூடு மட்டுமே எஞ்சியுள்ளதாகவும் அவர் சொன்னார்.
சடலங்களை, எட்டாயிரத்து 700 மீட்டர் உயரத்திலுள்ள, எவரெஸ்ட் மலை உச்சியிலிருந்து கீழே கொண்டு வருவது சவால் மிகுந்த பணியாக இருப்பதையும் அவர் ஒப்புக் கொண்டார்.
வெப்பம் அதிகரிப்பு, பனிப்பாறை சரிவு ஆகிய காரணங்களால், எவரெஸ்ட் உச்சியை நோக்கி செல்லும் வழி நெகிலும் மேலும் அதிகமானோரின் சடலங்களை அடையாளம் காண முடியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.