கோலாலம்பூர், ஜூலை 5 – கோவிட்-19 நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், இனி மற்ற சுவாச நோய் தொற்று கண்டவர்களை போலவே நடத்தப்படுவார்கள்.
அவர்களுக்கு இனி HSO – வீட்டுக் கண்காணிப்பு அல்லது தனிமைப்படுத்திக் கொள்ளும் உத்தரவு வெளியிடப்படாது.
கோவிட்-19 நோய் தொற்றுடன் வாழும் வழக்கத்திற்கு ஏற்ப, அதன் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகள் மற்றும் வழிகாட்டிகள் மறு ஆய்வுச் செய்யப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஜுல்கிப்ளி அஹ்மாட் தெரிவித்தார்.
இதற்கு முன், கோவிட்-19 நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், கட்டாயம் ஐந்து நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அதே சமயம், கோவிட்-19 நோய் தொற்று கண்டவர்களுடன், நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களுக்கும் அந்த புதிய விதிமுறை பொருந்தும்.
தொற்றுக்கான அறிகுறிகள் மோசமடைந்தால் மேல் சிகிச்சைக்காக, அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடலாம் என, இன்று மக்களவை கேள்வி பதில் நேரத்தில் அமைச்சர் சொன்னார்.