மலாக்கா, ஜூலை-11 – மலாக்கா, பண்டா ஹிலிரில் (Banda Hilir) வாடகைக்கு இருந்த அறையில் கரும்புகையை சுவாசித்து, மூச்சுத் திணறலுக்கு ஆளாகி சகோதரிகளான 2 சிறுமிகள் உயிரிழந்தனர்.
பிளாசா மக்கோத்தா மலாக்கா (Plaza Mahkota Melaka) கடைத் தொகுதியின் மூன்றாவது மாடியில் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
2-வது மாடியில் இருந்து சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சி, தனது அறைக்குள் கரும்புகை சூழ்ந்திருப்பதை கண்டு 999 அவசர எண்ணுக்கு அழைத்துத் தகவல் கொடுத்துள்ளார்.
தீயணைப்பு வீரர்கள் தாய் மற்றும் 2 மகள்களை ஒருவழியாகக் காப்பாற்றி கீழே கொண்டு வந்தாலும், அப்போது மூவருமே பேச்சு மூச்சின்றி கிடந்ததால் அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
12 வயது நூராலியா கரிசா (Nuralia Karisa), 2 வயது சாஹ்ரா அப்துல்லா ( Zahrah Abdullah) இருவரும் மலாக்கா மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் போது உயிரிழந்தனர்.
அவ்விருவரின் தாயான 40 வயது அஸ்லிஹா ங்கா அரிஃப்பின் ( Azliha Ngah Arrifin) இன்னமும் கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.
முதல் மாடியில் இருந்த அலுவலக அறையில் ஏற்பட்ட தீயால், இரண்டாம் மூன்றாம் மாடிகளுக்குக் கரும்புகைப் பரவியது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தீ ஏற்பட்டதற்கான காரணமும் சேதங்களும் மதிப்பிடப்பட்டு வருகின்றன.