பட்டர்வெர்த், ஜூலை 19 – மதுபானங்களை கடத்தும் கும்பல் ஒன்று காலி வீடு ஒன்றில் அவற்றை பதுக்கி வைத்திருப்பதை பினாங்கு சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுப்பிடித்தனர். அந்த வீட்டில் 45,994 ரிங்கிட் மதிப்புள்ள 21,648 டின்களைக் கொண்ட பீர் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றுக்கான சுங்க வரி மதிப்பு 205,772 ரிங்கிட் என்று பினாங்கு சுங்கத்துறையின் இயக்குனர் ரோஸ்லான் ரம்லி ( Roselan Ramli ) தெரிவித்தார்.
அந்த பீர்டின்களில் பாதிக்கும் மேல் ” Malaysia Duty not paid ” என்ற அடையாளம் இருந்தது. மேலும் அந்த மதுபானங்கள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதோடு அவை வைக்கப்பட்டிருந்த வீட்டின் உரிமையாளர் ஒரு ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டதும் சுங்கத்துறையின் விசாரணை மூலம் தெரியவந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட அந்த பீர் டின்கள் வட மலேசிய வட்டாரப் பகுதியிலுள்ள சந்தைகளுக்கு வினியோகிக்கப்படவிருந்தவை என பாகான் ஜெர்மலில் உள்ள சுங்கத்துறையின் கையிருப்பு கிடங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் ரோல்லான் கூறினார். இதனிடையே இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம்வரை 26 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பொருட்களையும் பினாங்கு சுங்கத்துறை பறிமுதல் செய்துள்ளதோடு இவற்றில் அதிக அளவு சிகரெட்டுகள் மற்றும் மதுபானங்கள் என ரோஸ்லான் தெவித்தார். மேலும் 1 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருள் மற்றும் 1.23 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் கூறினார்.