இஸ்கண்டார் புத்ரி, ஜூலை-21 – ஜோகூர், இஸ்கண்டார் புத்ரியில் போலீசாரின் சாலைத் தடுப்புச் சோதனையிலிருந்து (SJR) தப்பிக்கும் முயற்சியில் சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு எதிர்திசையில் வாகனமோட்டிய
ஆடவனை, போலீஸ் துரத்தி பிடித்துள்ளது.
வெள்ளிக்கிழமை இரவு ஜாலான் பெர்சியாரான் இண்டா சாலையில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
தப்பிச் சென்று பிடிபட்டவன், வெள்ளை நிற Toyota Vios காரோட்டியான 24 வயது இளைஞன் என இஸ்கண்டார் புத்ரி மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் மொஹமட் அஸ்லான் அப்துல் காடீர் (Mohd Azlan Abdul Kadir) தெரிவித்தார்.
SJR சோதனையில் காரை நிறுத்த மறுத்த அந்நபரை போலீஸ் துரத்திய போது, மணிக்கு 120 முதல் 130 கிலோ மீட்டர் வேகத்தில் அவன் காரைச் செலுத்தினான்.
எதிர்திசையில் வாகனமோட்டியதோடு, சாலை சமிக்ஞை விளக்குகளையும் மீறி விட்டு அவன் பாட்டுக்கு ஆபத்தான முறையில் வாகனமோட்டினான்.
2 போலீஸ் ரோந்து வாகனங்கள் உதவியுடன் விடாமல் துரத்திய போலீசார், கூலாய், செனாய் அனைத்துலக விமான நிலையத்தின் Jalan Tristan சாலையில் வைத்து அவனைக் கைதுச் செய்தனர்.
ஆபத்தான முறையில் வாகனமோட்டியது, அரசு ஊழியர்களைக் கடமையைச் செய்ய விடாமல் தடுத்தது ஆகியக் குற்றங்களுக்காக அவ்விளைஞன் மீது விசாரணை அறிக்கைத் திறக்கப்பட்டுள்ளது.