பெய்ஜிங், ஜூலை-21 – வட சீனாவில் கனமழையின் போது பெரியப் பாலம் இடிந்து விழுந்து 12 பேர் உயிரிழந்தனர்.
அவர்களின் உடல்கள், பாலத்திற்கடியில் ஆற்றில் விழுந்த 5 வாகனங்களிலிருந்து மீட்கப்பட்டன.
பாலம் உடைந்ததில் மொத்தமாக 17 கார்களும் 8 லாரிகளும் ஆற்றுக்குள் விழுந்த நிலையில், மேலும் 30 பேரைக் காணவில்லையென Xinxua செய்தி நிறுவனம் கூறியது.
இடிந்து விழுந்த பாலத்தின் ஒரு பகுதி ஆற்றில் மூழ்கியபடி இருக்கும் வீடியோக்களை அந்நாட்டு தொலைக்காட்சி நிலையங்கள் ஒளிபரப்பி வருகின்றன.
காணாமல் போனவர்களைத் தேடி மீட்கும் பணிகளைத் துரிதப்படுத்துமாறு சீன அதிபர் சீ சின்பிங் (Xi Jinping) அதிகாரிகளை உத்தரவிட்டுள்ளார்.
வட மற்றும் மத்திய சீனாவில் கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் கனமழையால் வெள்ளமேற்பட்டுள்ளதோடு, பெருமளவு சேதங்களும் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.