கோலாலம்பூர், ஜூலை 25 – சிலாங்கூர் அரசாங்கத்தின், இஸ்லாம் அல்லாத வழிபாட்டு தளங்களுக்கான இரண்டாம் கட்ட காசோலை வழங்கு நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.
LIMAS சிறப்பு செயற்குழு ஏற்பாட்டில் நடைபெற்ற அந்நிகழ்ச்சியில், 92 ஆலயங்கள் அல்லது வழிபாட்டு தளங்களுக்கு, மொத்தம் எட்டு லட்சத்து 15 ரிங்கிட் மதிப்புடைய காசோலைகள், எடுத்து வழங்கப்பட்டன.
வருடாந்திர ஆலய நிகழ்வுகளுக்கும், அதன் வளர்ச்சிக்கும் உதவும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் மாநில அரசாங்கம், LIMAS சிறப்பு செயற்குழு வாயிலாக, ஆலயங்களுக்கான இந்த மானியத் திட்டத்தை மேற்கொண்டு வருகிறது.
இதனை, ஆலய நிர்வாகங்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு, சமூக வளர்ச்சிக்கு பயனுள்ள திட்டங்களை செயல்படுத்த வேண்டுமென, சிலாங்கூர் மனிதவள, வறுமை துடைத்தொழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் பாபாராயிடு வீரமான் (Papparaidu Veraman) கேட்டுக் கொண்டார்.
குழந்தைகளையும், இளைஞர்களையும் நல்வழிப்படுத்தவும், பெரியோர்களுக்கு ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆலயங்கள் முக்கிய பங்காற்ற வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.
முன்னதாக, சிலாங்கூர் மாநிலத்திலுள்ள, இஸ்லாம் அல்லாத வழிபாட்டு தளங்களுக்கு உதவும் வகையில், 2009-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட LIMAS சிறப்பு செயற்குழுவிற்கு, இவ்வாண்டு மாநில அரசாங்கம் மொத்தம் 17 லட்சத்து 25 ஆயிரம் ரிங்கிட் நிதி ஒதுகீட்டை வழங்கி இருந்த வேளை ; ஜூன் 30-ஆம் தேதி வரையில், அதில் 13 லட்சத்து 95 ஆயிரம் ரிங்கிட் ஆலயங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டதையும் பாபாராயிடு சுட்டிக்காட்டினார்.