பட்டர்வொர்த், ஜூலை 30 – பினாங்கு, பெராயிலுள்ள (Perai) , உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில், வேலை செய்துக் கொண்டிருந்த போது, ஸ்கைலிப்ட் (Skylift) வாகனத்திலிருந்து விழுந்து, அந்நிய தொழிலாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், உள் விசாரணை நடத்துமாறு சம்பந்தப்பட்ட தொழிற்சாலை நிர்வாகத்திற்கு, JKKP எனும் மாநில தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை உத்தரவிட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை, பிற்பகல் மணி 2.15 வாக்கில், ஸ்கைலிப்ட் வழியாக 5.2 மீட்டர் உயரத்தில் வேலை செய்து கொண்டிருந்த 21 வயது அந்நிய நாட்டு தொழிலாளி ஒருவர் தவறி விழுந்து பலத்த காயங்களுக்கு இலக்கானார்.
உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், மூன்று நாட்களுக்கு பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அதனை தொடர்ந்து, விசாரணை முடியும் வரை, சம்பந்தப்பட்ட தொழிற்சாலையில், சம்பவம் நிகழ்ந்த பகுதியில் உடனடியாக வேலை நிறுத்தம் செய்யுமாறு JKKP பணித்துள்ளது.
அச்சம்பவத்திற்கான காரணத்தை கண்டறிய, உள் விசாரணை நடத்தி, முழு அறிக்கையை JKKP இடம் ஒப்படைக்க வேண்டுமென, நிர்வாகம் பணிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தொழிற்சாலை கட்டடத்தை புதுப்பிக்க, ஏணியை பொறுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த அந்த குத்தகை பணியாளர், கால் தவறி கீழே விழுந்து உயிரிழந்தாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.