கோலாலம்பூர், ஜூலை 30 – முதல் படிவ மாணவன் ஒருவன் தாக்கப்பட்டு காயத்திற்கு உள்ளானது தொடர்பில் பதின்ம வயதுடைய ஐந்து மாணவர்களை போலீசார் கைது செய்தனர். ஈப்போ இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த 16 மற்றும் 17 வயதுடைய நான்காம் மற்றும் ஐந்தாம் படிவங்களில் பயிலும் அந்த மாணவர்கள் ஜூலை 24ஆம்தேதி கைது செய்யப்பட்டதாக பேரா போலீஸ் தலைவர் அஸிஸி மாட் அரிஸ் ( Azizi Mat Aris ) தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மாணவன் தனக்கு ஏற்பட்ட காயத்திற்காக ஈப்போ Raja Permaisuri Bainun மருத்துவமனையில் வெளிநோயாளியாக சிகிச்சை பெற்றான். அந்த சம்பவத்திற்கான காரணத்தை ஆராய்ந்துவரும் போலீசார் சம்பந்தப்பட்ட இதர சந்தேகப் பேர்வழிகளை அடையாளம் கண்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவம் தொடர்பான வன்செயலில் ஈடுபட்டதாக குற்றவியல் சட்டத்தின் 147 ஆவது விதியின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதோடு சாட்சிகளிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டு வருவதாக அஸிஸி மாட் அரிஸ் தெரிவித்தார்.