ஈப்போ, ஆக 5 – டெலிகிரேம் சமூக வலைத்தளம் மூலம் தொடர்புகொண்ட ஆடவன் ஓருவன் தொழிற்சாலை வேலையிலிருந்து ஓய்வு பெற்ற 57 வயது பெண்மணியை 117,000 ரிங்கிட் மோசடி செய்துள்ளான். இல்லாத ASNB மலேசிய முதலீட்டு திட்டத்தின் பெயரைச் சொல்லி தம்மை அந்த மோசடி பேர்வழி ஏமாற்றியுள்ளது குறித்து பாதிக்கப்பட்ட பெண் போசில் புகார் செய்திருப்பதாக தைப்பிங் OCPD துனை கமிஷனர் முகமட் நசீர் இஸ்மாயில் ( Mohd Nasir Ismail ) தெரிவித்தார்.
ஜூலை 16 ஆம் தேதி டெலிகிராம் சாட்டில் அந்த முதலீட்டுத் திட்டம் விளம்பரப்படுத்தப்பட்டதை கண்டதாக அந்த பெண் தமது புகாரில் தெரிவித்துள்ளார். வெறும் 1,500 ரிங்கிட் முதலீடு செய்தால் அந்த திட்டத்தில் 75,000 ரிங்கிட்வரை லாபம் வழங்கப்படும் என்று வாக்குறுதி வழங்கப்பட்டதோடு முதலீடு செய்யப்பட்ட முதல் மூன்று அல்லது ஆறு மணி நேரத்தில் லாப ஈவுத் தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை நம்பி அந்த பெண் ஜூலை 16 ஆம்தேதிக்கும் ஜூலை 22 ஆம் தேதிக்குமிடையே 117, 375.00 ரிங்கிட் பணத்தை 9 வெவ்வேறு வங்கிக் கணக்கில் பட்டுவாடா செய்துள்ளார். வாக்குறுதி அளிக்கப்பட்டதைப் போல் லாப ஈவு தொகை கிடைக்கவில்லை என்பதோடு செலுத்திய மூலதன தொகையையும் மீட்க முடியாத நிலையில் அந்த பெண்மணி போலீசில் புகார் செய்திருப்பதாக முகமட் நசீர் இஸ்மாயில் தெரிவித்தார்.