டாக்கா, ஆக 5 – வங்காளதேச பிரதமர் ஷேய்க் ஹசினா ( Sheikh Hasina ) பதவி விலகியதோடு நாட்டிலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக வெளியேறி வட கிழக்கு இந்தியாவில் அகர்தாலா (Agartala ) நகர் சென்றடைந்ததாக தகவல்கள் வெளியாகின.
அவருக்கு இந்தியா பாதுகாப்பு அடைக்கலம் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. தனது ஆட்சிக்கு எதிராக பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதை தொடர்நது பிரதமர் பதவியிலிருந்து ஷேய்க் ஹசினா விலகியதாகவும் இடைக்கால அரசாங்கத்தை ராணுவம் அமைக்கும் என வங்காளதேச ராணுவ படைகளின் தளபதி வாகேர் உஸ் ஷாமான் ( Waker -Uz Zaman ) அறிவித்திருக்கிறார்.
மக்கள் அமைதியாக இருக்கும்படியும் ஆர்ப்பாட்டம் நடத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். நிலைமையை சரிசெய்வதற்கு ராணுவத்தின் மீது நம்பிக்கை வைக்கும்படி பொதுமக்களை வாகேர் கேட்டுக்கொண்டார்.
அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் ராணுவத்துடன் ஒத்துழைப்பதற்கு அவர்கள் முன்வந்ததாகவும் அவர் கூறினார். இதற்கு முன்னதாக 76 வயதுடைய ஷேய்க் ஹசினாவும் அவரது சகோதரி ஷேய்க் ரெஹானாவும் டாக்காவிலிருந்து வெளியேறிவிட்டதாகவும் அவர்கள் ராணுவ ஹெலிகாப்டர் மூலமாக இந்தியாவுக்கு புறப்பட்டதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டன. தற்போது வங்காளதேச அரசாங்கத்தின் நிர்வாகம் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.