கோலாலம்பூர், ஆகஸ்ட்-6 – பாரீஸ் ஒலிம்பிக்கில் அதிரடி படைத்து வரும் தேசிய விளையாட்டார்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருப்பதை, Air Asia தலைமை செயலதிகாரி தான் ஸ்ரீ தோனி ஃபெர்னாண்டஸ் (Tan Sri Tony Fernandes) கோடி காட்டியுள்ளார்.
பூப்பந்துப் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் கடுமையாகப் போராடி வெண்கலப் பதக்கம் வென்ற Aaron Chia – Soh Wooi Yikக்கை, தோனி முன்னதாக தனது சமூக ஊடகத்தில் பாராட்டியிருந்தார்.
தேசிய வீரர்களின் மனோத்திடம் மெய்சிலிர்க்க வைக்கிறது என அவர் குறிப்பிட்டிருந்த நிலையில், எதிலும் வேகமாகவும் விவேகமாகவும் இருக்கும் நம் வலைத்தளவாசிகள் இதுதான் சமயமென தோனியிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
பதக்கம் வென்றவர்களுக்கு Air Asia-வும் ஏதாவது சன்மானம் வழங்கலாமே என ஒரு வலைத்தளவாசி பரிந்துரைக்க, பலரும் அதில் சேர்ந்துக் கொண்டனர்.
இலவச விமான டிக்கெட்டுகள் கொடுக்கலாமே என சிலரும், இலவச சுற்றுலா வழங்கலாமென மேலும் சிலர் கூறியிருந்தனர்.
அதிலும் ஒருவர், பதக்கம் வென்ற Aaron Chia – Soi Wooi Yik மட்டுமின்றி, கடும் போராட்டத்திற்குப் பின்னர் வெண்கலப் பதக்கத்தை நழுவ விட்ட மகளிர் இரட்டையர் வீராங்கனைகளாக பெர்லி தான் – எம்.தீனாவுக்கும் இலவச டிக்கெட்டுகளை வழங்கலாமே எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், டோனி கொஞ்சமும் தாமதிக்காமல் ‘this can’ என நச்சென பதிலளித்திருந்தார்.
அவரின் பதிலைப் பார்த்து மகிழ்ச்சியில் திளைத்துப் போன வலைத்தளவாசிகள் தோனியின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர்.