கோலாலம்பூர், ஆக 9 – சைய்ன் ராயனின் ( Zayn Rayyan ) சகோதரனை பராமரிக்கும் தற்காலிக உரிமை அவனது உறவினரின் பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டது. இன்று முதல் இந்த தற்காலிக பாதுகாப்பு உரிமை 5 ஆண்டு காலத்திற்கு வழங்கப்பட்டது.
சிலாங்கூர் சமூக நலத்துறைக்கும் அந்த சிறுவனின் பெற்றோர்களுக்குமிடையே மாஜிஸ்திரேட் Muhammad Syafiq Sulaiman முன்னிலையில் நடைபெற்ற கலந்துரையாடலுக்குப் பின் இந்த முடிவு காணப்பட்டதாக சைய்ன் ராயன் குடும்பத்தின் வழக்கறிஞரான நுருல் இக்ரிமான் முகமட் ராயா ( Nurul Ikrimah Mohd Raya ) தெரிவித்தார்.
சைய்ன் ராயனின் பெற்றோர் ஸைய்ம் இக்வான் ஷஹாரி (Zaim Ikhwan Zahari) – இஸ்மனிரா அப்துல் மானாப் ( Ismanira Abdul Manaf ) ஆகியோர் வாரத்திற்கு ஒரு நாள் எட்டு மணி நேரத்திற்கு தங்களது இரண்டாவது மகனை சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனினும் அவர்கள் காணொளி வாயிலாக வரம்பின்றி அக்குழந்தையை அழைக்க முடியும் என நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது நுருல் கூறினார். அக்டோபர் மாதம்வரை இரண்டு மாதத்திற்கு மட்டுமே அந்த சிறுவனை பராமரிக்கும் உரிமை ஸைய்ம் இக்வானின் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
சைய்ன் ராயனின் உடலில் காயம் ஏற்படும் அளவுக்கு அவனை பராமரிப்பதில் அலட்சியத்துடன் இருந்ததாக அவனது பெற்றோர்களான ஸைய்ம் இக்வான் ஷஹாரி (Zaim Ikhwan Zahari) – இஸ்மனிரா அப்துல் மானாப் ( Ismanira Abdul Manaf ) ஆகியோருக்கு எதிராக கடந்த ஜூன் 13 ஆம் தேதி குற்றஞ்சாட்டப்பட்டது.