கோலாலம்பூர், ஆகஸ்ட் 12 – ம.இ.கா-வின் நீண்டகால வளர்ச்சி, காலத்துக்கேற்ற சீரமைப்பு முயற்சிகளைச் செயல்படுத்துவதற்கும் மற்றும் தொடர் முன்னேற்றத்திற்கான இலக்கை அடைவதற்கும் கட்சியின் தேசியத் தலைவரின் மூன்று தவணை பதவிக்கால வரம்பு ஒரு தடையாக உள்ளது.
எனவே கட்சியின் அந்த அரசியல் விதி 58.2 (A), சட்டத்திருத்தம் செய்ய வேண்டும் என்று 78ஆவது சிலாங்கூர் மாநில பேராளர்கள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக சிலாங்கூர் மாநில ம.இ.கா துணை தலைவர் டத்தோ இரவிச்சந்திரன் தெரிவித்தார்.
தற்போதைய ம.இ.காவின் தேசியத் தலைவர் டான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ விக்னேஸ்வரன் கட்சியின் கொள்கைகள் மற்றும் நோக்கங்களில் மிகத் திறமையானவர்.
கட்சி தலைமைத்துவத்திலும் மற்ற எல்லா நிலையிலும் நிலைத்தன்மையையும் வளர்ச்சியையும் கொண்டு வந்துள்ள அவர், தொடர்ந்து பதவி வகித்தால், கண்டிப்பாக கட்சி மேலும் வலுவடையும் என்றார் ரவிச்சந்திரன்.
இந்த தீர்மானத்துடன் மற்ற தீர்மானங்கள் குறித்தும் அவர் இவ்வாறு கூறினார்.
இதனிடையே, நேற்று சிலாங்கூர் மாநில ம.இ.கா தலைவராக டத்தோ சங்கர் ஐயங்கார் நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சியில் அடுத்த தலைமுறையினர் பொறுப்புக்கு வர வேண்டும் என்பது தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் இலக்காகும்.
அதன் அடிப்படையில், முன்னாள் சிலாங்கூர் மாநில ம.இ.கா தலைவர் எம்.பி.ராஜாவுக்கு பாராட்டைத் தெரிவித்து, புதிய தலைவராக டத்தோ சங்கரை ம.இ.காவின் தேசிய துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் அறிவித்தார்.
புதிய தலைவராக பதவி ஏற்ற, டத்தோ சங்கர் ஐயங்கார் சிலாங்கூர் மாநிலத்தை சிறப்பான முறையில் பல நடவடிக்கைகள் மூலம் வழிநடத்துவேன் என்று கூறினார்.
நேற்று அம்பாங்கில் நடைபெற்ற சிலாங்கூர் ம.இ.காவின் பேராளர்கள் மாநாட்டில் 650க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.