காஜாங், ஆகஸ்ட்-14 – காஜாங்கில் நகைக் கடையொன்றில் கொள்ளையிட்டதாக நம்பப்படும் 30 வயது ஆடவன் நேற்று பிற்பகலில் SILK நெடுஞ்சாலையின், சுங்கை பாலாக் டோல் சாவடி அருகே போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.
ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறையைச் சேர்ந்த போலீசார் நிறுத்தச் சொல்லியும் கேட்காதவன், திடீரென போலீசை நோக்கி துப்பாக்கியால் சுட்டான்.
இதையடுத்து போலீசும் வேறு வழியின்றி அவனைத் திருப்பிச் சுட்டதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேய்ன் ஓமார் கான் (Datuk Hussein Omar Khan) தெரிவித்தார்.
அவன் துப்பாக்கியால் சுட்டதில் போலீஸ்காரர் ஒருவரும் காயமடைந்தார்.
சுட்டுக் கொல்லப்பட்ட குற்றவாளி, கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் ஏற்கனவே 6 குற்றப்பதிவுகளைக் கொண்டிருந்ததும் தெரிய வந்துள்ளது.
சில மாதங்களுக்கு முன் பிளாசா மெட்ரோ காஜாங் பேரங்காடியில் நகைக்கடையொன்றில் நிகழ்ந்த ஆயுதமேந்திக் கொள்ளையிலும் அவனுக்குத் தொடர்பிருப்பதாக நம்பப்படுகிறது.