கோலாலம்பூர், ஆகஸ்ட்-21 – கிளந்தான், நெங்கிரி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது மலாய் ஆட்சியாளர்களைச் சிறுமைப்படுத்தும் வகையில் பேசியது தொடர்பாக, தான் ஸ்ரீ முஹிடின் யாசினிடம் இன்று வாக்குமூலம் பதிவுச் செய்யப்பட்டது.
அதன் போது விசாரணைக்கு உதவக் கூடிய சில முக்கிய ஆவணங்களைத் தாம் போலீசிடம் ஒப்படைத்ததாக, அந்த முன்னாள் பிரதமர் அறிக்கையொன்றில் கூறினார்.
பத்தாவது பிரதமர் நியமனம் தொடர்பில், 2022, நவம்பர் 21-ஆம் தேதி இஸ்தானா நெகாராவிடம் தாம் வழங்கிய ஆவணங்கள் அவையென, பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் தலைவருமான அவர் சொன்னார்.
அதோடு, தாம் பிரதமராகப் பதவியேற்பதற்கு ஆதரவளித்த 115 MP-களின் சத்தியப் பிரமாண வாக்குமூலங்களையும் அவர் போலீசிடம் வழங்கினார்.
16-வது மாமன்னர் குறித்து ஒரு வார்த்தை கூட நான் தவறாகப் பேசவில்லை; மலாய் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்களை நான் ஏவி விடவும் இல்லை; ஆக என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தீய நோக்கத்தைக் கொண்டவை என முஹிடின் தெரிவித்தார்.
தாம் பேசியதெல்லாம் வரலாற்றில் நடந்தவை மட்டுமே என்றார் அவர்.
முன்னதாக MIDA-வில் உள்ள தனது அலுவலகத்தில் முஹிடின் சுமார் ஒரு மணி நேரத்திற்கு வாக்குமூலம் அளித்தார்.
அவர் மீது செய்யப்பட்ட 30-க்கும் மேற்பட்ட போலீஸ் புகார்களை அடுத்து வாக்குமூலம் பதிவுச் செய்யப்பட்டது.