கொல்கத்தா, ஆகஸ்ட் 21 – கடந்த ஆகஸ்ட் 9ஆம் திகதி, கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கார் மருத்துவக்கல்லூரியின் மருத்துவமனையில் 31 வயது பயிற்சி டாக்டர் மெளமிதா தேப்நாத் (Moumita Debnath) பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் உலகையே உலுக்கி விட்டது.
இக்கொடூர சம்பவத்தைக் கண்டித்து, அங்கங்கே பல போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் தினமும் நடைபெற்று வருகின்றன.
இவ்வழக்கு தொடர்பாக காவல்துறை தற்போது, ஒருவரைக் கைது செய்து விசாரணை நடத்தியும் வருகிறது.
இந்நிலையில், கொலை செய்யப்பட்ட டாக்டர் மெளமிதா தேப்நாத்தின் பெயர் கடந்த 24 மணி நேரத்தில் ஆபாச தளங்களில் அதிகம் தேடப்பட்ட பெயர் எனும் அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்றை கூகள் வெளியிட்டு நம்மை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மெளமிதா தேப்நாத்தின் பலாத்காரம் தொடர்பான வீடியோ, ஆபாச படங்கள் என கூகளில் அவர் குறித்த தகவல்கள் 110 விழுக்காட்டிற்கும் அதிகமாகத் தேடப்பட்டு வருகிறது.
இந்தியாவில் மட்டுமல்லாது வங்களாதேசம், இலங்கை போன்ற பிற நாடுகளை சேர்ந்த இணையப் பயனர்களும் மெளமிதாவின் கற்பழிப்பு காட்சிகளைப் பார்ப்பத்தில் ஆர்வம் காட்டி இந்த அருவருக்கத்தக்க செயலை செய்து வருகின்றனர்.
கூகள் மட்டுமல்லாது, ஆபாச இணையதளங்களிலும் இவரின் பெயர் அதிகம் தேடப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மனித மிருகங்களின் சதைப்பசிக்குப் பலியான இவரை, ஆபாச தளங்களில் தேடும் மனிதாபிமானமற்ற செயல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இறந்த பின்பும் ஒருவர் மீது இரக்கமில்லாமல் ஆபாச எண்ணத்தோடு தேடி அலையும் மனிதர்களை எந்த பிரிவில் சேர்ப்பதென்ற கேள்வி எழுந்துள்ளது.