ஷா ஆலாம், ஆகஸ்ட் -27 – சமூக ஊடகங்கள் உரிமம் பெற வேண்டியதை கட்டாயமாக்கும் அரசாங்கத்தின் திட்டத்தை எதிர்த்து ஆட்சேபக் கடிதம் அனுப்பியதாகக் கூறப்படுவதை, பிரபல e-hailing நிறுவனமான Grab மறுத்துள்ளது.
ஆசிய இணையக் கூட்டமைப்பு (AIC), அது குறித்து பிரதமருக்கு ஒரு திறந்த மடல் அனுப்பியதில் எங்களுடையப் பங்கு எதுவுமில்லை.
எங்களிடம் கலந்தாலோசிக்கப்படவுமில்லை.
அதைவிட முக்கியமானது, அரசாங்கம் கொண்டு வரும் விதிமுறை எங்களைப் பாதிக்கப் போவதில்லை; எனவே அதைப் பற்றி கருத்துரைக்கப் போவதில்லையென அறிக்கை வாயிலாக Grab கூறியது.
அரசாங்கத்துடனான ஒத்துழைப்பில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்றும் அது தெரிவித்தது.
ஆகஸ்ட் 23-ஆம் தேதியிடப்பட்ட பிரதமருக்கான அந்த திறந்த மடலை, AIC முன்னதாக தனது இணைய அகப்பக்கத்தில் வெளியிட்டது.
இந்நாட்டில் குறைந்தது 80 லட்சம் பதிவுப் பெற்ற பயனர்களைக் கொண்டுள்ள சமூக ஊடகங்கள் அனைத்தும் இனி உரிமம் பெறுவதைக் கட்டாயமாக்கும் திட்டத்தை அரசாங்கம் ஒத்தி வைக்க வேண்டுமென அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
AIC கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் நிறுவனங்களில் Google, Meta, X, Apple Inc, Amazon, Grab உள்ளிட்டையும் அடங்கும்.