கோலாலம்பூர், ஆகஸ்ட்-29 – இவ்வாண்டு பிரிட்டனுக்கு cannabis வகைப் போதைப்பொருளைக் கடத்த முயன்றதன் பேரில் கைதான பயணிகளில் கிட்டத்தட்ட கால்வாசி பேர் மலேசியர்கள் ஆவர்.
மலேசியாவுக்கான பிரிட்டன் உயர் ஆணையம் அந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 12 வரை, ஆகாய மார்க்கமாக பிரிட்டனுக்கு cannabis-சைக் கடத்த முயன்ற 378 பேர் அந்நாட்டு விமான நிலையங்களில் வைத்து கைதுச் செய்யப்பட்டனர்.
அவர்களில் 93 பேர் மலேசியர்கள் ஆவர்; இதன் மூலம் பிரிட்டானியர்களுக்கு அடுத்து, மிக அதிகமாக கைதானவர்களாக மலேசியர்கள் விளங்குகின்றனர்.
பிரிட்டன் விமான நிலையங்களில் இவ்வாண்டு இதுவரையில் மட்டும் மொத்தமாக 15 டன் cannabis கைப்பற்றப்பட்டுள்ளது.
இது கடந்தாண்டு முழுவதும் பறிமுதல் செய்யப்பட்டவற்றை விட 3 மடங்கு அதிகமாகும்.
Cannabis போதைப்பொருளுடன் சிக்கும் பயணிகளுக்கு பிரிட்டன் நாட்டு சட்டத்திட்டத்தின் படி, அபராதங்களோடு சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.
Cannabis இறக்குமதிக்கு அதிகபட்சமாக 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
எனவே, அச்செயலில் ஈடுபடும் முன், வரப்போகும் ஆபத்தை நங்குணர்ந்து செயல்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.