பூச்சோங், செப்டம்பர் 8 – சிலாங்கூர், தாமான் மாஸ் பூச்சோங்கில் நீர் சுத்திகரிப்பு ஆலை நிர்மாணிக்கப்பட்டு வரும் இடத்தருகே, நேற்று மாலை ஆற்றங்கரை சரிந்து விழுந்தது.
இதனால் தண்ணீர் உடைத்துக் கொண்டு வெளியேறியதில், அக்கட்டுமானப் பகுதி சுமார் 19 மீட்டர் ஆழத்திற்கு மூழ்கியது.
எனினும் அச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை.
இந்நிலையில், அந்த நீர் சுத்திகரிப்பு ஆலைக் கட்டுமானத்தை உடனடியாக நிறுத்துமாறு தீயணைப்பு மீட்புத் துறை உத்தரவிட்டுள்ளது.
செப்பாங் நகராண்மைக் கழகமும் பொதுப் பணித் துறையும் (JKR) அங்கு சோதனையிட்டு, அப்பகுதி உண்மையிலேயே பாதுகாப்பானதே என உறுதிச் செய்த பிறகே கட்டுமானம் தொடரப்பட வேண்டும் என அத்துறை கூறியது.
அப்பகுதியில் ஆற்றங்கரை அடுத்தடுத்து சரிந்து, தண்ணீர் வெளியேறுவதும், கட்டுமானத் தொழிலாளர்கள் பாதுகாப்புக் கருதி ஓடுவதும் வைரலாகியுள்ள வீடியோவில் தெரிகிறது.