புது டெல்லி, செப்டம்பர் -10 – காற்றுத் தூய்மைக்கேட்டைக் குறைக்கும் முயற்சியில் இந்தியத் தலைகர் புது டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்படுகிறது.
தீபாவளிக்கு முதல் நாள் தொடங்கி ஜனவரி வரை அத்தடை அமுலில் இருக்குமென டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தெரிவித்தார்.
கடந்தாண்டைப் போலவே இவ்வாண்டும் அனைத்து வகை பட்டாசுகளின் உற்பத்திக்கும், சேமிப்புக்கும், விற்பனைக்கும் தடை விதிக்கப்படுகிறது.
அரசின் அத்தடையை ஒரு சிலர் மத சுதந்திரத்தில் தலையீடாக பார்த்தாலும், காற்றுத்தூய்மைக் கேட்டிலிருந்து மக்களைக் காப்பாற்ற அந்நடவடிக்கை அவசியமே என அமைச்சர் சொன்னார்.
புகையை வெளியேற்றும் பட்டாசுகளுக்கு புது டெல்லியில் சில ஆண்டுகளாகவே தடை உள்ளது.
தடையை மீறினால் அபராதமும் சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டாலும், தீபாவளி போன்ற கொண்டாட்டங்களின் போது மக்களைக் கட்டுப்படுத்த முடிவதில்லை.
இதனால் தடையை அமுல்படுத்துவதில் அதிகாரிகள் சவாலை எதிர்நோக்குகின்றனர்.
2 கோடி மக்கள் தொகையைக் கொண்ட புது டெல்லி தான், உலகிலேயே மிகவும் தூய்மைக்கேடான தலைநகரமாகும்.