கோலாலம்பூர், செப்டம்பர் 24 – கடந்த மே 28ஆம் திகதி, கோலாலம்பூர், பண்டார் மக்கோத்தா சிராஸ்சில் (Bandar Mahkota Cheras), 17 மாத குழந்தையின் தலைமுடியை இழுத்து, மூக்கை அழுத்தி வலுக்கட்டாயமாக உணவளித்த குற்றத்திற்காக, முன்னாள் குழந்தை பராமரிப்பாளர், இன்று காஜாங் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.
24 வயதான அந்த முன்னாள் குழந்தை பராமரிப்பாளருக்கு, நீதிமன்றம் இன்று தொடங்கி 14 மாதங்களுக்குச் சிறைத்தண்டனை விதித்தது.
சிறைத் தண்டனை முடித்த பிறகு, 120 மணிநேரம் சமூக சேவை செய்ய வேண்டும் என்ற கூடுதல் தண்டனையும், அது விதித்துள்ளது.
இதனிடையே, குற்றச்சாட்டப்பட்டவருக்கு இன்னும் பாலூட்டும் இரண்டு மாத குழந்தை இருப்பதால், சிறைத்தண்டனையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று அவரின் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
மேலும், குற்றச்சாட்டப்பட்டவர் தைராய்டு புற்றுநோய்க்குச் சிகிச்சை பெற்று வருபவர் என்றும் அவரின் குழந்தையும் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனினும், குற்றம் சாட்டப்பட்டவருக்கு மட்டுமின்றி, குழந்தை பராமரிப்பு மையங்களை நிர்வகித்து வரும் அனைவருக்கும் கடுமையான தண்டனையாக இது இருக்க வேண்டும் என்று துணை அரசு வழக்கறிஞர் ஃபெலி ஜெஃப்ரி லான்ஜுங்கன் (Faelly Jeffrey Lanjungan) நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.