ஷா ஆலாம், அக்டோபர்-18, அக்டோபர் 8-ஆம் தேதி சிலாங்கூர் கிள்ளானில் காணாமல் போனதாகக் கூறப்பட்ட 12 வயது சிறுமி, பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
கொஞ்சம் தாமதித்திருந்தாலும் கோலாலம்பூர், ச்சௌ கிட்டில் (Chow Kit) செயல்பட்டு வரும் விபச்சார கும்பலிடம் அவள் சிக்கியிருப்பாள் என, சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேய்ன் ஓமார் கான் (Datuk Hussein Omar Khan) தெரிவித்தார்.
அச்சிறுமியைக் கடத்தி, செத்தியா ஆலாமில் உள்ள அடுக்குமாடி வீட்டில் அடைத்து வைத்து, முறையே 13, 23 வயதிலான 2 சந்தேக நபர்கள் 4 நாட்களாக துன்புறுத்தி வந்துள்ளனர்.
கடத்தல் கும்பலின் தலைவன் உண்மையில் அச்சிறுமியை விபச்சார கும்பலிடம் விற்று விட்டான்; ஆனால் சிறுமி காணாமல் போன தகவலை போலீஸ் பத்திரிகையில் வெளியிட்டதால், அக்கும்பல் கடைசி நேரத்தில் சுதாகரித்துகொண்டது.
திட்டத்தை மாற்றி விட்டு, ஒரு e-hailing காரிலேற்றி சிறுமியை அவளது வீட்டுக்கே அனுப்பி வைத்து விட்டனர்.
இந்நிலையில், அச்சிறுமியைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய இருவர் உள்ளிட்ட 6 சந்தேக நபர்கள் கைதாகியுள்ளானர்.
அவர்களில் இருவர் அச்சிறுமிக்கு நன்கு அறிமுகமானவர்கள்; அதை விட ஆச்சரியம் என்னவென்றால் அதிலொரு பெண் அச்சிறுமியின் அண்ணனது முன்னாள் காதலி என்பது தான்.
அதனால் தான் காரில் கடத்தப்படும் போது, தெரிந்த முகம் தானே என அச்சிறுமி சாதாரணமாக இருந்து விட்டது விசாரணையில் கண்டறியப்பட்டது.
சம்பந்தப்பட்ட விபச்சார கும்பலைச் சேர்ந்த இருவருக்கு போலீஸ் தற்போது வலை வீசியுள்ளது.