வாஷிங்டன், அக்டோபர்-19, Asteroid எனப்படும் சிறுகோள்களின் தாக்குதல்களிலிருந்து பூமியைக் காப்பாற்ற, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, 1,000 விண்கலங்களையும் அணு வெடிப்பையும் பயன்படுத்தவுள்ளது.
அந்த 1,000 விண்கலங்களும், பூமியை நோக்கி வரும் சிறுகோள்களை விண்ணிலேயே இடைமறித்து மோதி, அவற்றை திசைதிருப்பி விடும்.
சிறுகோளின் தாக்குதலால் சுமார் 6 கோடி ஆண்டுகளுக்கு முன் ஒட்டுமொத்த டைனோசர் உயிரினமே அழிந்துபோனதை மனதில் வைத்து, நாசா அவ்வாறு தயாராகி வருகிறது.
தேசிய ஆயத்த வியூகம் மற்றும் செயல் திட்டத்தில் நாசா அந்த முன்னெச்சரிக்கைத் திட்டத்தை வரைந்துள்ளதாக The Sun UK பத்திரிகை கூறியது.
சிறுகோள்கள் அல்லது ராட்சத வால் நட்சத்திரங்களின் தாக்குதல்களிலிருந்து பூமியை எப்பாடு பட்டாவது காப்பாற்றும் கடப்பாட்டில் நாசா உறுதியாக இருப்பதாக அதன் நிர்வாகி பில் நெல்சன் (Bill Nelson) தெரிவித்தார்.
டைனோசர் காலத்தில் விண்வெளித் திட்டங்கள் இல்லை; ஆனால் நம்மால் அது முடியுமென்கிறார் நெல்சன்.
விண்வெளியிலிருந்து வரும் ஆபத்துகளை எதிர்கொள்ளும் ஆற்றல் பூமிக்கு இருப்பதை உறுதிச் செய்யும் விதமாக, 2022-ஆம் ஆண்டில் விண்கலத்தை அனுப்பி ஒரு சிறுகோள் மீது நாசா திட்டமிட்ட மோதலை உருவாக்கியது.
மோதப்பட்ட சிறுகோள் என்னவானது என்பது குறித்து ஆய்வு செய்ய தனியொரு விண்கலம் அனுப்பப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.