குவந்தான், அக் 23 – நெகிரி செம்பிலான் லுக்குட்டில்தொழிற்பேட்டையில் உள்ள கிடங்கில் பல மாதங்களாக போலிமதுபானங்களை தயாரித்த கும்பல் ஒன்றை சுங்கத்துறை அதிகாரிகள்
முறியடித்தனர். கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி பகாங் சுங்கத் துறையினர் அந்த வளாகத்தில் நடத்திய சோதனையில் 3,928 லிட்டர் மதுபானத்தை பறிமுதல் செய்தனர். வரி செலுத்தப்படாமல் இருந்த அந்த மதுபானத்தின் மொத்த மதிப்பு 227,597 ரிங்கிட்டாகும். மேலும்
பதப்படுத்தும் கருவிகள், தண்ணீர் குழாய்கள், போலி மதுபான ஸ்டிக்கர்களின் சுருள்கள், வரி செலுத்தப்பட்டவை என்ற ஸ்டிக்கர்களுடன் கூடிய போத்தல்கள் மற்றும் பல்வேறு அளவுகளைக் கொண்ட காலி போத்தல்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக பஹாங் சுங்கத்துறை இயக்குனர் முகமட் அஸ்ரி செமான் ( Mohamad Asri Seman ) தெரிவித்தார்.
அங்குள்ள கிடங்கு மதுபான ஆலையாக மாற்றப்பட்டிருந்தது. அந்த கும்பல் மதுபானத்தை தயாரித்து அவற்றை போத்தல்களில் நிரப்பி, பெட்டியில் அடைத்து உள்நாட்டு சந்தைக்கு விநியோகம் செய்து வந்துள்ளது. அந்த மதுபானம் உண்மையானது என்று வாடிக்கையாளர்களை நம்பவைத்து ஏமாற்ற அந்த போத்தல்களில் QR பார்கோடுகளைக் கொண்ட முத்திரைகளையும் அக்கும்பல் பயன்படுத்த வந்துள்ளது. பரிசோதனை நடத்தப்பட்டபோது அந்த கிடங்கில் இயந்திரங்கள் எதுவும் இயங்கவில்லை என்பதோடு அங்கு தொழிலாளர்கள் எவரும் இல்லையென்று முகமட் அஸ்ரி கூறினார். இதனிடையே மற்றொரு சோதனை நடவடிக்கையில் வரி செலுத்தப்படாத 31 லடசம் ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் சிகரெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக முகமட் அஸ்ரி கூறினார்.