
தெலுக் இந்தான், அக்டோபர்-27, பேராக், தெலுக் இந்தான் சாய்ந்த கோபுர சதுக்கத்தில் சனிக்கிழமையன்று 300-க்கும் மேற்பட்டோர் திரண்டு தேசியக் கொடியான ஜாலூர் கெமிலாங்கைப் பெருமையுடன் பறக்க விட்டனர்.
முன்னதாக அங்கு நடைபெற்ற குவான் டோங் அனைத்துலகக் கலாச்சாரக் கொண்டாட்டத்தின் போது சீன சுற்றுப்பயணிகளால் சீன நாட்டுக் கொடிகள் பறக்கவிடப்பட்டதற்கு பதிலடியாக, மலேசியக் கொடிகள் பறக்க விடப்பட்டன.
தேசிய கீதமான Negaraku, Jalur Gemilang மற்றும் Saya Anak Malaysia போன்ற நாட்டுப் பற்றுப் பாடல்களும் அதன் போது பங்கேற்பாளர்களால் பாடப்பட்டன.
பேராக் மாநில பாஸ் கட்சி ஆணையரும் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான ரஸ்மான் சாக்காரியாவும் (Razman Zakaria) அதில் பங்கேற்றார்.
சீனக் கொடிகள் பறக்க விடப்பட்ட சம்பவத்தை முன்னதாக கடுமையாகக் கண்டித்து அறிக்கை விட்டவர்களில் ரஸ்மானும் முக்கியமானவர் ஆவார்.
அச்சம்பவம் தற்செயலாக நடந்ததென்றும் அதற்காக பகிரங்க மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும் குவாங் டோங் பண்பாட்டு விழாவின் ஏற்பாட்டுக் குழு அறிக்கை வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.