குவாலா திரங்கானு, அக்டோபர்-27, குவாலா திரங்கானுவில் சோதனைக்கு வந்த குடிநுழைவுத் துறை அதிகாரிகளிடம் சிக்குவதிலிருந்து தப்பும் முயற்சியில், வங்காளதேச ஆடவர் கழிவறை கண்ணாடியில் மாட்டிக் கொண்டார்.
வெறும் கைலியுடன் கண்ணாடியில் ஏறிக் குதித்து தப்ப முயன்றவர், சற்று பெரிய உடலமைப்பைக் கொண்டிருந்ததால் அதில் சிக்கிக் கொண்டார்.
வெளியே வர முடியாமல் தொங்கிக் கொண்டு தவித்தவரை, குடிநுழைவு அதிகாரிகள் ஏணியைக் கொடுத்து ஒரு வழியாகக் கீழே இறக்கினர்.
மாராங், குவாலா நெரூஸ் சுற்று வட்டாரங்களில் கட்டுமானத் தொழிலாளர்களாக வேலை செய்து கொண்டு அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு தங்கி வந்த 35 பேரில் அந்த வங்காளதேசியும் அடங்குவார்.
அடுக்குமாடியின் இரண்டாவது மூன்றாவது மாடிகளுக்குச் செல்லும் அனைத்து அவசர படிகட்டுகளையும், லிஃவ்டையும் அதிகாரிகள் முன்கூட்டியே சுற்றி வளைத்து விட்டதால், தப்பியோட முயன்ற சிலரின் முயற்சி தோல்வியில் முடிந்தது.
பதின்ம வயதினர் இருவர் உட்பட மொத்தமாக 218 பேர் சோதனையிடப்பட்டதில், 35 பேர் கைதாகினர்.
முறையான பயணப் பத்திரம் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக கைதான அனைவரும் ajil குடிநுழைவுத் தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டனர்.