கோலாலம்பூர், டிசம்பர்-12, தற்காப்பு அமைச்சு மற்றும் கல்வி அமைச்சு ஒருங்கிணைப்பில் அடுத்தாண்டு தொடங்கும் PLKN 3.0 தேசிய சேவைப் பயிற்சியை மேற்கொள்ள, பள்ளிகளில் கேடட் பயிற்சிப் பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
தேசியம் மீதான மன்றத்தின் நிர்வாக வாரியக் கூட்டத்தில் அம்முடிவு எடுக்கப்பட்டதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ ஃபாடில்லா யூசோஃப், உயர் கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ சா’ம்ரி அப்துல் காடிர், கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சிடேக் உள்ளிட்டோர் அக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
PLKN 3.0 பயிற்சித் திட்டம் கவனமாகவும், கால மாற்றத்திற்கு ஏற்ற அணுகுமுறையிலும் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும், அக்கூட்டத்தில் தாம் அறிவுறுத்தியதாக அவர் சொன்னார்.
ஒவ்வொரு மலேசியருக்கும் மிகவும் முக்கியமான, தேசத்தின் அர்த்தத்தைப் பற்றிய புரிதலையும் உணர்வையும் கட்டியெழுப்புவதற்கான திட்டத்தின் மேம்பாடு குறித்தும் பிரதமருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
அத்திட்டத்தின் வாயிலாக, வாழ்க்கையின் தடைகளைத் தாங்கக்கூடிய மற்றும் பொறுப்பான மலேசிய குடிமக்களாக நாட்டிற்கு பங்களிக்கக்கூடிய இளம் மலேசியத் தலைமுறையை உருவாக்க முடியும் என்றார் அவர்.
PLKN 3.0 அமுலாக்கத்தை சோதனை செய்து பார்க்கும் வகையில், ஜனவரி 12 தொடங்கி 2 வாரங்களுக்கு 200 ஆண்கள் தன்னார்வ முறையில் பயிற்சியில் ஈடுபடவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.