வெர்ஜினியா, டிசம்பர்-19, அமெரிக்காவின் வெர்ஜினியா (Virginia) மாநிலத்தில் உள்ள ஒரு பண்ணையில், நோயாளிகளுக்கு உடல் உறுப்புகளை மாற்றுவதற்காக, மரபணு மாற்றப்பட்ட பன்றிகளை இனப்பெருக்கம் செய்து வருகின்றனர்.
விலங்குகளின் உடல் உறுப்புகளை மனிதர்களுக்கு மாற்றுவது மீதான ஆராய்ச்சியில் முன்னணி வகிக்கும் உயிரியல் தொழில்நுட்ப நிறுவனமான Revivicor, அதில் ஈடுபட்டுள்ளது.
விலங்கு உறுப்புகளை மனிதர்களுக்குள் பொருத்தும் திட்டமானது, அமெரிக்காவில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கும் அளவுக்கு மோசமாகியுள்ள உடல் உறுப்புப் பற்றாக்குறையைத் தீர்ப்பதை, நோக்கமாகக் கொண்டுள்ளது.
அமெரிக்காவில், 100,000-க்கும் மேற்பட்ட மக்கள் மாற்று அறுவை சிகிச்சை குறிப்பாக சிறுநீரக மாற்று சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர்.
இந்தப் பண்ணையில் வளர்க்கப்பட்ட பன்றியின் சிறுநீரகம் தான் அண்மையில் டோவானா லூனி (Towana Looney) என்ற நோயாளிக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
53 வயது அம்மாது தற்போது நன்றாக இருப்பதாகவும், அவருக்கு பொருத்தப்பட்ட சிறுநீரகம் நன்கு வேலை செய்வதாகவும் கூறப்படுகிறது.
நோயாளிகளின் நோய் எதிர்ப்பு சக்தியால் நிராகரிக்கப்படும் வாய்ப்புகளைக் குறைக்கும் வகையில், பன்றிகளின் மரபணு மாற்றப்படுவதாக, ஆராய்ச்சிப் பணிகளுக்குத் தலைமையேற்றுள்ள டேவிட் அயரெஸ் (David Ayares) கூறினார்.
“நீங்கள் நினைப்பது போல் இவை சாதாரணப் பண்ணைப் பன்றிகள் அல்ல; மில்லியன் கணக்கான டாலர்கள் இந்த மரபியல் உற்பத்தியில் முதலீடு செய்யப்பட்டுள்ளன; எனவே அவை உயர்ந்த மதிப்புள்ள விலங்குகள்” என்றார் அவர்.
மரபணு மாற்றப்பட்ட அப்பன்றிகளின் சிறுநீரகங்கள் எதிர்காலத்தில் 1 மில்லியன் டாலர் அல்லது 4.5 மில்லியன் ரிங்கிட்டுக்கு விற்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என டேவிட் கூறினார்.
பன்றிகளின் உடல் உறுப்புகளை மனிதர்களுக்கு மாற்றுவது வெறும் அறிவியல் கற்பனைக் கதைகளாக இருந்ததை, Revivicor நிறுவனத்தின் இந்த 20 ஆண்டு கால ஆராய்ச்சிப் பணி, உயிர் காக்கும் மருத்துவ பராமரிப்பாக மாற்றியுள்ளது.