![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/12/MixCollage-28-Dec-2024-01-07-PM-4402.jpg)
ஜோகூர் பாரு, டிசம்பர்-28, இல்லாத ஒரு பங்கு முதலீட்டுத் திட்டத்தை நம்பி 700,000 ரிங்கிட்டை ஏமாந்துள்ளார் ஜோகூர் பாருவைச் சேர்ந்த ஒரு குடும்ப மாது.
55 வயது அந்த உள்ளூர் பெண்ணிடமிருந்து நேற்று புகாரைப் பெற்றதாக, வட ஜோகூர் பாரு மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் பல்வீர் சிங் மஹிந்தர் சிங் (Balveer Singh Mahindar Singh) தெரிவித்தார்.
எல்சா என்ற பெயருடைய நண்பர் மூலமாக செப்டம்பர் 18-ஆம் தேதி அம்மாதுவுக்கு அப்பங்கு மூதலீடு குறித்து தெரிய வந்துள்ளது.
WhatsApp வாயிலாக இன்னொருவர் அறிமுகமாகி, போடும் பணத்திற்கு 10-லிருந்து 20 விழுக்காடு வரை இலாபம் பார்க்கலாமெனக் கூறி ஆசை வார்த்தைக் காட்டியுள்ளார்.
அம்மாதுவும் அதனை நம்பி CW(M).LNC என்ற செயலியை Play Store-ரில் பதிவிறக்கம் செய்து, கொடுக்கப்பட்ட 4 வங்கிக் கணக்குகளுக்கு 22 தடவையாக பணத்தை மாற்றியுள்ளார்.
டிசம்பர் 13 வரை அப்படி அவர் ‘முதலீடு’ செய்த மொத்தப் பணம் 751,070 ரிங்கிட்டாகும்.
போட்டப் பணத்திற்கான இலாபத் தொகையை மீட்க முற்பட்ட போது, மேலும் கட்டணம் செலுத்துமாறு அவர் வற்புறுத்தப்பட்டார்.
தான் ஏமாற்றப்பட்டிருப்பதை அப்போது தான் அவர் உணர்ந்துள்ளார்.
அம்மோசடி சம்பவம் குற்றவியல் சட்டத்தின் 420-வது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது.